search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில்"

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது
    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்குச் சிலை எதுவுமில்லை.வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

    தல வரலாறு


    அம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குச் சபரிமலை சென்று வருவது கடினமாகிப் போனது. ஒருமுறை அவர் சபரி மலைக்குச் சென்ற போது, மலைப் பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. அதனால் அவ்வப்போது ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

    அப்படி ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு வயதானவர் அங்கு வந்து, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றைக் கொடுத்து, சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வரவில்லை. அதனால் அந்தப் பொருட்களுடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டுக்கு, சபரிமலையில் சந்தித்த முதியவர் வந்து, தான் கொடுத்த மூன்று பொருட்களையும் வைத்துக் கொள்ளும்படியும், அப்பொருட்களையே ஐயப்பனாக நினைத்து வழி படும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார். அதன் பிறகே, அந்தப் பொருட்களைத் தன்னிடம் கொடுத்துச் சென்றவர் இறையம்சம் பொருந்தியவர் என்பதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அந்த மூன்று பொருட்களையும் வழிபாட்டுக்காக வைத்து, அவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபடத் தொடங்கினார் என்று ஆலயம் அமைந்த வரலாற்றைச் சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு

    இந்த ஆலய கருவறையில் ஐயப்பன் சிலை எதுவுமில்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் கல் மட்டுமே வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மாளிகப்புறத்து அம்மனுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படியே ஆலயம் திறக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    இங்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுகின்றனர்.

    அமைவிடம்

    எர்ணாகுளம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சப்புரா பகுதிக்கு செல்ல வேண்டும். எர்ணாகுளம் மற்றும் காலடியிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    ×